இதுகுறித்துத் தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி 4ஆம் தேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்தவிருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தற்போது `முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டத்திற்காக `முழு அடைப்பு' நடத்தியதாக, அ.இ.அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்திலே அது குறித்து வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த `முழு அடைப்பு' நடக்கவில்லை என்பதும், `உண்ணாவிரத'ப் போராட்டம் மட்டுமே நடந்தது என்பதும்தான் உண்மை.
இந்தச் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4.2.2009 அன்று `முழு அடைப்பு' நடத்துவதாகக் கூறியிருப்பது சட்டப்படி உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரானது. எனவே இந்தப் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பரிமாற்றத்துக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாமல் அரசு சட்டப்படி தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.