நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

சனி, 31 ஜனவரி 2009 (17:24 IST)
தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நாளை வழங்கப்படுகிறது.

இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் முதல் கட்டமாக கடந்த டிசம்பர் 21ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

2வது கட்ட முகாம் நாளை (1ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நட‌‌க்‌கிறது. இதனா‌ல் தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவா‌ர்க‌ள்.

மாநகராட்சி மருத்துவமனைகள், சத்துணவு கூடங்கள், சுற்றுலா மையங்கள், பேரு‌ந்து, ரயில், விமான நிலையங்கள் என 40,399 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு 1,126 மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

பொது சுகாதாரத் துறை, மாநகராட்சி, நகராட்சிகளைச் சேர்ந்த ஊழியர்கள் 2 லட்சம் பேர் சொட்டு மருந்து கொடுக்கும் பணியை செ‌ய்‌கிறா‌ர்க‌ள். மேலு‌ம் நடமாடும் பூத் மூலமும் சொட்டு மருந்து கொடுக்கப்படு‌கிறது.

சொட்டு மருந்து வழங்கப்பட்டதற்கு அடையாளமாக குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து அடுத்த 2 நாட்களில் சொட்டு மருந்து வழங்கும் பணியை சுகாதார ஊழியர்கள் மேற்கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். ஏற்கனவே கொடுத்திருந்தாலும் நாளையும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.

இத‌னிடையே, ''சொட்டு மருந்து வழங்குவது தொடர்பாக தவறான தகவல்களை தெரிவித்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்'' என்று மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் எச்சரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்