இலங்கைக்கு ஐ.நா. கண்காணிப்புக் குழு - டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
சனி, 31 ஜனவரி 2009 (16:33 IST)
போரால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இலங்கைக்கு ஐ.நா. கண்காணிப்புக் குழுவை அனுப்ப மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஐ.நா. கண்காணிப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதுவே இலங்கை இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான வழி என்றும் அவர் கூறினார்.
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி வரும் 7ஆம் தேதி (பிப்ரவரி) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தான் தலைமை தாங்க உள்ளதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் விரைவான தொழில்வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று கூறி மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியின் மாவட்ட மாநாடு நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த மாநாடு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றார் கிருஷ்ணசாமி.