அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவ பொம்மையை எரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் கே.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்சி வளர்ச்சி பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.வி.தங்கபாலு, கடந்த இரண்டு நாட்களாக மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, கும்பகோணம் போன்ற பகுதிகளில் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படங்கள் எரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
சோனியா காந்தி, பிரதமர் உருவ பொம்மை எரிக்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் சம்பந்தப்பட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்ட தங்கபாலு, இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக காங்கிரஸ் கட்சி பல தியாகங்களை செய்து உள்ளது என்றும் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதால் எந்த சாதனையையும் நிகழ்த்த போவதில்லை என்றார்.
உலக அளவிலும், இந்திய அளவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என்று கூறிய தங்கபாலு, அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள். அவர்களை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். விடுதலைப் புலிகளை திருமாவளவனும், வைகோவும் தான் ஆதரிக்கின்றனர். விடுதலைப்புலிகளை எங்களுக்கு தெரியவே தெரியாது என்று என் முன்பு ராமதாஸ் தெரிவித்தார் என்று தங்கபாலு கூறினார்.
தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறிய தங்கபாலு, விடுதலைப் புலிகளை ஆதரிப்பது இல்லை என்ற கருத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது என்றார்.