இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2வது நாளாக இன்றும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கொலைவெறித் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வலியு றுத்தி நேற்று முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பை வழக்கறிஞர்கள் தொடங்கினர். தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் ஆகியவை இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து போராட்டத்தை துவக்கியது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று 2வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் உயர் நீதி மன்ற பணிகள் அனைத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால் கனகராஜ், செயலர்கள் மோகன கிருஷ்ணன், வேல்முருகன், ஈழத்தமிழர்கள் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் இளந்திரையன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.