பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு
சனி, 31 ஜனவரி 2009 (14:23 IST)
சென்னை : ஈழத் தமிழர் பாதுகாப்புக்காக தமிழகம் தழுவிய அளவில் பிப்ரவரி 4ஆம் தேதி பொது வேலை நிறுத்தமும், 7ஆம் தேதி கறுப்புக் கொடி பேரணிகளும் நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் நலன்காக்கும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தியாகராய அரங்கில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலர் தா.பாண்டியன், பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்வேறு தரப்பினரின் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பு களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பா.ம.க தலைவர் கோ.க.மணி வரவேற்று பேசினார். கூட்டம் தொடங்கும் முன்பு ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த இளைஞர் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேடையில் அவரது திருவுருவப்படம் மலர் மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு தலைமை ஏற்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பேசுகையில், ஆறரை கோடி தமிழர்களின் பிரதிநிதிகள் இங்கு கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் ஈழத் தமிழர்களுக்காக தனித்தனியாக போராடி வந்துள்ளோம்.
இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் அமைதியாக வாழ்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வில்லையே என்ற கவலை இதுவரை இருந்தது. இன்று முதன் முறையாக தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறோம். இது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அச்சத்தையும், உலகத்தமிழர்களுக்கு உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
இந்த இயக்கம் என்பது அரசியல், சாதி, மத, இன, மொழி ஆகிய எல்லாவற்றையும் கடந்து அவரவர்களுக்கு தனித்தனியாக கொள்கைகள் இருந்தாலும் தமிழர்களுக்காக ஒன்றுபட்டிருக்கிறோம். இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை பொறுத்தவரை எந்தவித வன்முறைகளுக்கும் இடம் தராமல் யாரையும் இழிவுபடுத்துவதோ, அல்லது எந்தத் தலைவர்களின் படங்கள் மற்றும் சிலைகளை அவமதிப்பதோ அல்லது உருவ பொம்மைகளை எரிப்பதோ கூடாது என்பதுதான் கொள்கை.
இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு பிறக்க நாம் ஒன்றுபட்டு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் அவர்களுடைய மனதை மாற்றி நம்முடன் இணைந்து செயல்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம் என்று பழ.நெடுமாறன் பேசினார்.
அதன் பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் பிப்ரவரி 4ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்றும், 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு நகரம், கிராமம் என்று எல்லா இடங்களிலும் தமிழர்கள் ஒன்று கூடி கறுப்புக்கொடி ஊர்வலங்கள் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பிப்ரவரி 5ஆம் தேதி இந்த பாதுகாப்பு இயக்கம் மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கும் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த இரு போராட்டங்களையும் வெற்றிகரமாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.