முத்துக்குமார் தியாகத்தை அரசியல் ஆக்குவது நமது பண்பாட்டிற்கு எதிரானது : கருணாநிதி
சனி, 31 ஜனவரி 2009 (12:45 IST)
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த இளைஞர் முத்துக்குமாரின் தியாகச் செயலை அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக்காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, இது இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அந்தத்தீவில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் அக்கொடுமை தொடராமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து மாண்ட நிகழ்ச்சி மருத்துவமனையில் இருக்கும் என் மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்பதை என்னை உணர்ந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.
நமது கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் இத்தகைய தற்கொலைச் செய்திகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்று கழகத்தின் கருத்தை வலியுறுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறார்.
கழகப் பொருளாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தீக்குளித்து மாண்ட அந்த இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
ஆனால் இன்று வந்துள்ள செய்திகளைப் பற்றி சிந்திக்கும் போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பாபு கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக்காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.