ஈழத் தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தி தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு சர்வ கட்சி தலைவர்கள், மாணவர்கள், திரையுலகினர் இன்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சாஸ்திரி பவன் முன்பு நேற்று தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் உடல் கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலர் தா.பாண்டியன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, பா.ஜ.க. சார்பில் திருநாவுக்கரசர், வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன், ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர்கள் சத்யராஜ், வடிவேல், இயக்குனர்கள் தங்கர்பச்சான், சேரன், கவிஞர் தாமரை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கொளத்தூரில் வசிக்கும் ஏராளமான பொதுமக்களும் முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.