பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: காங்கிரஸ்
வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:53 IST)
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டமன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் டி.யசோதா, ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி அளவுக்கு யாராவது செய்திருக்கிறார்களா? ஈழத் தமிழர்களுக்காக எங்கள் தலைவர் ராஜீவ்காந்தியையே இழந்திருக்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரனை கைது செய்து அவருக்கு தண்டனை வாங்கி தரும் வரை எங்கள் குரல் ஓயாது என்றார்.
உடனே மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி எழுந்து, "பிரபாகரனை கைது செய்து தண்டனை வாங்கித் தர வேண்டுமென்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கமா?' என்று கேட்டார். அதற்கு அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் "ஆமாம்'' என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், "ராஜீவ் காந்தி கொலை குற்றத்தை பிரபாகரனே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனை துயர சம்பவம் என்று அவரே கூறியிருக்கிறார். எனவே அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதில் எந்த மாற்றமும் இல்லை' என்றார்.