சட்டப்பேரவை இன்று தொடங்கியதும் இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று வந்த பிறகு 48 மணி நேரம் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு செய்துள்ளது. தமிழ்மக்கள் எதிர்பார்த்த, சட்டப்பேரவை நடந்த விவாதத்துக்கும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதற்கும், பிரணாப் முகர்ஜியின் பேச்சுவார்த்தை காரணமாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம். அதற்கேற்ப விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்திற்கு முன் வரவேண்டும். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தெளிவான நிலைப்பாடு என்ன? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் சிவபுண்ணியம், விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். அதே நேரத்தில் பாதிக்கப்படும் மக்களை விடுதலைப் புலிகள்தான் பாதுகாக்கின்றனர் என்றார்.
அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் மூலம் அங்குள்ள தமிழர்களை வெளியே கொண்டு வந்து சேர்க்க மத்திய அரசு நல்ல சூழ்நிலையை உருவாக்கி தந்துள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் சிவபுண்ணியம், தி.மு.க.வின் கருத்து வெளிப்படையாக வராமல் உள்ளது என்றார்.
இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் அன்பழகன், எங்கள் மனதில் இருப்பதெல்லாம் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதான். இந்த பிரச்சனையில் ஒவ்வொரு அடியாகத்தான் எடுத்து வைக்க முடியும். இதில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அறிவித்துள்ளது. இதற்கு பிரபாகரனோ, விடுதலைப் புலிகளை சேர்ந்தவர்களோ நாங்களும் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைக்கிறோம் என்று கூறவில்லை. இலங்கை சொன்ன அளவிற்கு கூட விடுதலைப்புலிகள் சொல்ல வில்லை.
இந்த பிரச்சனையில் இங்கு நாம் தேர்தலை மனதில் கொண்டு வேகமாக அடியெடுத்து வைக்கலாம். அங்கு முடியாது. எனவே ஈழத் தமிழர்களை காப்பதுதான் தி.மு.க.வின் ஒரே நோக்கம் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் நன்மாறன் பேசுகையில், இலங்கையின் போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறோம். இது நிரந்தர போர் நிறுத்தத்தை நோக்கி செல்ல வேண்டும். இதை பயன்படுத்தி அமைதி பேச்சுவார்த்தையும் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ம.தி.மு.க. உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் பேசுகையில், பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசி உள்ளது. ஐ.நா.சபை பணியாளர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் தங்களுடைய சேவையை அங்கு செய்ய முடியவில்லை. 48 மணி நேர போர் நிறுத்தத்தை முழுமையாக பயன்படுத்தி பீரங்கி, விமானப்படையை மேலும் வலுவாக்கி விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்கத்தான் இந்த முயற்சி நடக்கிறது என்றார்.
பின்னர் பேசிய அவை முன்னவர் அன்பழகன், போர் முனையில் ஈழத் தமிழர்களை காக்க இரு தரப்பினரும் பின்வாங்க வேண்டும். பாதுகாப்பு கருதி விடுதலைப்புலிகள் இருக்கும் இடத்தில் மக்கள் குவிந்து விட்டனர். அங்கு தாக்குதல் நடத்தும் போதுதான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதை முழுமையாக அலசி ஆராய முடியாது. முழு தகவலும் நமக்கு கிடைப்பதில்லை. இலங்கையில் தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்றுதான் அந்நாட்டு அரசு கூறுகிறது. அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். எனவே ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறுகிறார்கள். மொத்தத்தில் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றார்.