சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவர்கள் ஊர்வலமாகச் சென்று முத்துக்குமரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாக இருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தின் போதே காவல்துறையினர் 300 மாணவர்களை கைது செய்துவிட்டனர்.
நாமக்கல் மோகனுர் சாலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலைகல்லூரி மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது இலங்கை ராணுவத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். 'தாக்காதே தாக்காதே, தமிழர்கள் மீது தாக்காதே, 'மத்திய அரசே, மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடு' போன்ற கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மாணவர்களில் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவமொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை பாரத்கலை கல்லூரி, சரபோஜி அரசினர் கல்லூரி மாணவ- மாணவிகள் ஊர்வலமாக சென்று ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை போராட்டம் செய்தனர்.