இலங்கை தூதரகத்தை தாக்க முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேர் கைது
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் நேற்று முத்துக்குமரன் என்ற இளைஞர் உயிர்த்தியாகம் செய்தார். இதன் எதிரொலியாக மேலும் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கின்றன.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று காலை திரண்டனர்.
பின்னர் அவர்கள் பார்த்தசாரதி சாலை சந்திப்பு வழியாக அனைவரும் இலங்கை தூதரகத்தில் நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையர் மவுரியா, உதவி ஆணையர் ரவீந்திரன் ஆகியோர் இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரை கைது செய்தனர்.