இலங்கையில் தனிநாடு கேட்பது சாத்திய‌‌மி‌ல்லாத ஒ‌ன்று : ஜெயலலிதா

வெள்ளி, 30 ஜனவரி 2009 (09:55 IST)
இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடுவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், தமிழர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கிய கூட்டுப் பேராட்சிக்குட்பட்ட சுயாட்சி கோருவதே நியாயமானது என்று‌ம் அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா கூறியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழம் புரட்சிகர அமைப்பு போன்ற அமைப்புகளை இலங்கைத் தமிழர்களின் காவலர்கள் என்று ஒரு காலத்தில் அ.இ.அ.தி.மு.க. கருதியதை நான் மறுக்கவில்லை.

விடுதலைப் புலிகள் ஆப‌த்தான அமை‌ப்பு

ஆனால், அடிப்படையில் தமிழ்ச் சகோதரர்கள் என்பதை மறந்து, மிதவாத அரசியல் அமைப்புகளான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் இதர அமைப்புகளின் மதிப்புக்குரிய தலைவர்களை, விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்ட ஆரம்பித்ததிலிருந்து, தமிழர்களின் பிரதிநிதி, தமிழர்களின் நலனுக்காக போராடும் அமைப்பு என்று ஏற்கப்படும் உரிமையை விடுதலைப் புலிகள் இழந்துவிட்டார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்தின் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு நம்பத் தகுதியற்ற, முதிர்ச்சியில்லாத, ஆபத்தான அமைப்பு என்பது நிரூபணமானது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அந்த துரதிருஷ்டவசமான நாளிலிருந்து, அ.இ.அ.தி.மு.க. கொள்கை சீராகவும், தெளிவாகவும் இருந்து வருகிறது.

இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த இலங்கை அரசு எந்த முயற்சி எடுத்தாலும் அதனை அ.இ.அ.தி.மு.க. முழுமையாக எதிர்க்கும். சுய நிர்ணயத்திற்காகவும், சம உரிமைக்காகவும் போராடும் இலங்கைத் தமிழர்களுக்கு அ.இ.அ.தி.மு.க. முழு ஆதரவு உண்டு.

அதே சமயத்தில் இந்த இலக்கை எய்துவதற்காக ஆயுதம் ஏந்தி போராடுவதையும், கட்டுக்கடங்காத, கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபடுவதையும் அ.இ.அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. பேச்சு வார்த்தை மூலம் அமைதியான வழியில் அரசியல் தீர்வு காணப்படுவதே இந்தப் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க உதவும் என அ.இ.அ.தி.மு.க. நம்புகிறது.

விடுதலைப் புலிகள் அரசியல் தீர்வு காண ஈடுபட‌க்கூடாது

இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடுவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், தமிழர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கிய கூட்டுப் பேராட்சிக்குட்பட்ட சுயாட்சி கோருவதே நியாயமானது என்றும் அ.இ.அ.தி.மு.க. கருதுகிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் போது, அது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் என்றில்லாமல், தோட்டத் தொழிலாளர்களாகவுள்ள தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மை அமைப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. கருதுகிறது.

முதிர்ந்த பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய முயற்சியில் அனைத்து தமிழ் மிதவாதிகளும், தமிழ் அரசியல் அமைப்புகளும் இடம் பெற வேண்டும். இந்தப் பொறுப்பை தீவிரவாதிகளிடம் ஒப்படைப்பது தற்போதுள்ள சூழ்நிலையை மேலும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மக்களின் மத்தியில் ஒற்றுமையின்மையை வளர்த்து, அவர்களது துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

சர்வாதிகாரத்தை அடைய வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்களது தலைவனின் வழியில் குறுக்கிடுபவர்கள் என யாரை நினைத்தாலும், அவர்களை கொல்வது, பிற அரசியல் மற்றும் தீவிரவாத குழுக்களைச் சேர்ந்த மிதவாத தமிழ்ச் சகோதரர்களையும், தலைவர்களையும் அழிப்பது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தமிழர்களின் பிரதிநிதியாக செயல்படும் தார்மீக உரிமையை இழந்துவிட்ட எதேச்சாதிகார விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த அரசியல் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது, ஈடுபடக்கூடாது என அ.இ.அ.தி.மு.க. கருதுகிறது.

விடுதலைப் புலிகள் ‌தீ‌விரவாத அமை‌ப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது தங்களையும், தங்கள் தலைவனையும் பாதுகாப்பதற்காக, வெட்கமில்லாமல் இளம் சிறுவர்களை தங்கள் படையில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டு, அப்பாவி இலங்கைத் தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி வரும் ஒரு தீவிரவாத அமைப்பு ஆகும். என்னுடைய நிலைபாட்டை நான் தெளிவாக விளக்கிவிட்டதால், கருணாநிதியிடமிருந்து கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் கோருகிறேன். தமிழ் மண்ணில் ராஜீவ்காந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா?.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன்றளவிலும் இலங்கை ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த போது தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஏன் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை? தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பதவியை ஏன் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை?

இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு சிறப்புப் பயிற்சி அளித்த போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து, அதாவது, தனி நாடு கோரிக்கை குறித்து, கருணாநிதி மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் உள்ள தனித் தமிழ் ஈழம் குறித்து கருணாநிதி என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளாரோ, அதே நிலையை இந்தியாவின் பிரச்சனைக்குரிய மாநிலங்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறாரா? எ‌ன்று ஜெயல‌‌லிதா கே‌ள்வ‌ி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.