மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் குறித்து அவை முன்னர் அன்பழகன் அளித்த விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க உறுப்பினர் வேல்முருகன் எழுந்து, அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி இலங்கைக்கு சென்று வந்தது குறித்து அரசிடம் ஏதாவது தகவல் உள்ளதா என்று கேட்டார்.
இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் வை.சிவபுண்ணியம் இதே பிரச்சனையை எழுப்பி பேசுகையில் மத்திய அரசை குற்றம்சாற்றினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அவை முன்னவர் அன்பழகன், உறுப்பினர் எழுப்பிய பிரச்சனைக்கு பதிலளித்து கூறுகையில், இலங்கையில் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சட்டப்பேரவையில் பல தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ள முதலமைச்சருடன் அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு, உங்கள் விருப்பப்படி இன்றே இலங்கைக்கு செல்கிறேன். உங்கள் கோரிக்கைகள் குறித்து இலங்கை அரசிடம் பேசி ஆவன செய்ய முற்படுவேன் என்று கூறிவிட்டு அவர் இலங்கை சென்றார்.
இலங்கையில் பேச்சு நடத்திவிட்டு வந்த பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கை குறித்து பத்திரிகைகளில் வெவ்வேறு தலைப்புகளில் செய்தி வெளியாகி உள்ளது. அங்கு அவர் என்ன பேசினார் என்பதை தெரிந்துகொள்ள இந்த அவைக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. விடுதலைப்புலிகளை கைது செய்ய வேண்டும். புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இங்கே கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாடும் உள்ளது; அதே சமயம் விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிற கருத்துடையவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் இதில் மையக் கருத்து என்னவென்றால் தமிழர்கள் மீதான படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான். பிரணாப் முகர்ஜியின் ஆங்கில அறிக்கை தமிழில் வெவ்வேறு தலைப்பிட்டு செய்தி வந்துள்ளது. அவருடைய அறிக்கையை ஆங்கிலத்திலேயே படிக்கிறேன். (பிரணாப் முகர்ஜியின் ஆங்கில அறிக்கை முழுவதையும் அன்பழகன் அவையில் வாசித்தார்).
தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை குறைக்க வேண்டும்; வெடிகுண்டு வீச்சு, விமானத்தாக்குதல் ஆகியவற்றை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் போன்ற பாதுகாப்பு வட்டாரங்களில் தாக்குதல் நடத்துவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்றுக்கொண் டுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாம் எல்லோரும் அரசியல்வாதிகள். அதனால் நாம் இந்த விடயத்தில் கருத்துக்களை கூற முடியும். ஆனால் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் அன்னிய நாட்டு பிரச்சனை குறித்து அதில் நமக்கு ஈடுபாடு இருந்தாலும் பேசுகிற போது அளவோடுதான் பேச முடியும். பிரணாப் முகர்ஜியின் அறிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சமான தமிழர்களின் மீதான தாக்குதல் குறைக்கப்படும் என்ற செய்தி உரிய முறையில் அவர் இந்தப் பிரச்சனையில் இலங்கை அதிபருடன் பேசியுள்ளார் என்று தமிழக அரசு கருதுகிறது என்று அன்பழகன் கூறினார்.
இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இது பற்றி ஏதோ கூறிவிட்டு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் அதில் பங்கேற்றது.