இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், உடனே போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் சங்க செயலர் சுரேஷ்பாபு தலைமையில் போராட்டம் செய்தனர்.
அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் உருவ படத்தை எரித்தனர். இந்த சம்பவத்தால் காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம் அடைந்தனர். இன்று காலை நகர மாவட்ட காங்கிரஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் திரண்டு வந்து கோரிப்பாளையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்தது விரைந்து வந்த காவல்துறையினர், மறியல் செய்த தெய்வநாயகம், ஐ.என்.டி.யு.சி. மாநில துணை தலைவர் கோவிந்தராஜன், அமைப்பு செயலர் தங்கராஜ் காந்தி, வாசன் பேரவை தலைவர் செய்யது பாபு உள்பட 50 பேரை கைது செய்தனர்.
இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலர் சுரேஷ் பாபு தலைமையில் இன்று வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே சோனியா படம் எரிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவை சேர்ந்த முத்துப்பாண்டி தலைமையில் காங்கிரசார் அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது சோனியா காந்தி உருவ படத்தை எரித்த வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கோஷங்கள் எழுப்பினர். இதனால் வழக்கறிஞர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பின்னர் திடீரென அவர்கள் கைகலப்பில் இறங்கினர். இதை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர். இந்த நிகழ்வால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.