இலங்கைத் தமிழர்கள் காக்கப் படவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இங்குள்ள தமிழர்களின் உயிர் என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் எத்தகைய முயற்சியிலும் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று தமிழகம் ஒன்றுபட்டு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் எவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டாம். அத்தகை முயற்சியில் இறங்குவதை யாரும் ஆதரிக்கவும் முடியாது.
சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் இன்று காலையில் தீக்குளித்து உயிர் நீத்த துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் இந்த நிகழ்வை பின்பற்றி தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் எவரும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர்கள் காக்கப் படவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இங்குள்ள தமிழர்களின் உயிர். எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் எத்தகைய முயற்சியிலும் எவரும் ஈடுபடக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதனை இலங்கை தமிழர்களே விரும்ப மாட்டார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.