இலங்கை பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு பிப்ரவரி 3ஆம் தேதி கூடுகிறது
வியாழன், 29 ஜனவரி 2009 (09:34 IST)
இலங்கைத் தமிழர் படுகொலை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக, பிப்ரவரி 3ஆம் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் கூடுகிறது.
இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் இனப் படுகொலை தாக்குதல் குறித்து தி.மு.க. செயற்குழு விவாதித்து முக்கிய முடிவு எடுக்கும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதையடுத்து தி.மு.க. செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் கூடுகிறது. இதில் இலங்கைத் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை நிறுத்துவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நிதி அமைச்சரும் தி.மு.க. பொதுச் செயலருமான அன்பழகன் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அப்போது தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில், ''இலங்கை தமிழ் இனப்படுகொலை குறித்து விவாதிக்கப்படும்'' என்று அன்பழகன் கூறியுள்ளார்.