இந்திய அயலுறவுத்துறை அமைச்சர், பிரணாப் முகர்ஜி மருத்துவமனையிலுள்ள முதலமைச்சர் கருணாநிதியிடம் தொலைபேசியில் இன்று பேசியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரணாப் முகர்ஜியிடம் அப்போது இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி பேசியதாகவும், இன்று மாலை தாம் இலங்கைக்குச் செல்வதாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதலமைச்சரிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வது பற்றி இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது, தமிழக நிதியமைச்சரும், அவை முன்னவருமான அன்பழகன் இன்று காலையில் அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் விசாரித்ததாகவும், அப்போது முதலமைச்சர் கேட்டுக் கொண்டதையடுத்து இன்று இலங்கை செல்லவிருப்பதாக பிரணாப் முகர்ஜி கூறியதாக அன்பழகன் தெரிவித்தார்.