ஆலைக்கு கரும்பு கொடுக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் விலையில் 1 டன் கரும்புக்கு 2 கிலோ சர்க்கரை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உடுமலைப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க மாநில அரசு முன் வர வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்வெட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் என கரும்பு விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். மேலும், கரும்பு வெட்டுக்கூலி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 60-க்கு மேல் கூடியிருக்கிறது.
தானாகவே காடுகளில் வளரும் கருவேல மர விறகுகளுக்கு கூட ஒரு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் விலை கிடைக்கிறது. ஆனால் கடன் வாங்கி முதலீடு செய்து, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு விவசாயிகள் விளைவிக்கும் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வழங்குவதில் தவறில்லை.
ஆலைக்கு கரும்பு கொடுக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் விலையில் 1 டன் கரும்புக்கு 2 கிலோ சர்க்கரை வழங்க வேண்டும். கரும்பு வெட்டுவதற்கு தயாராகி சர்க்கரை ஆலை கட்டிங் ஆர்டர் கொடுக்க தாமதத்தால் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் 10 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக எனது தலைமையில் இன்று காலை 10 மணிக்கு உடுமலைப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.