வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்களுக்கு நல்லது செய்வோம் என்று எழுதி கொடுக்கும் தேசிய கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்றார்.
webdunia photo
FILE
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவுகளால் தே.மு.தி.க துவண்டு விட்டது என்று சிலர் பேசுகிறார்கள். விஜயகாந்த் எப்போதும் துவள மாட்டான். எதிரிகளுக்கு சவால்விட்டுதான் எனக்கு பழக்கம். என்னைபோல்தான் என் கட்சி தொண்டர்களும் இருக்கிறார்கள். தி.மு.க.விற்குதான் தோல்வி பயம் இருக்கிறதே தவிர எனக்கு இல்லை.
திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றி சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் கூறுகிறார். ஒரு இடைத்தேர்தலுக்காக அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அனுப்பி பணம் கொடுத்து ஓட்டுவாங்கியதுதான் சாதனையா? இது சாதனை இல்லை; வேதனை.
அ.தி.மு.க.வும் அவர்கள் ஆட்சியின் போது இதேபோல் தான் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கியதோடு, தி.மு.க.வினரையும் அடித்து விரட்டினர். அதன் பின்னர் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தனர். அதேபோல்தான் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினரை அடித்து விரட்டிவிட்டு பணம் கொடுத்து ஓட்டுவாங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கின்றது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்குகள் தே.மு.தி.க.விற்கு இருக்கிறது. இதனால்தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி, கூட்டணி என்று பேசி வருகிறார்கள். நான் கண்டிப்பாக தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் போகமாட்டேன். இவர்களின் பணத்திற்கு மயங்குபவன் நான் அல்ல.
ஏற்கனவே நான் கூறியது போல் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்கிறேன் என்று எழுதி கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி சேருவேன். அதுவும் தேசிய கட்சியுடன் தான் கூட்டணி இருக்குமே தவிர, மாநில கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றார் விஜயகாந்த்.