ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டுமானா‌ல் ‌தி.மு.க. ஆ‌ட்‌சியை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம் : திருமாவளவன் வேண்டுகோள்

சனி, 24 ஜனவரி 2009 (10:05 IST)
இந்திய அரசை பணிய வைத்து ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டுமானால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் விரைந்து முன்வரவேண்டும் எ‌ன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்களை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதி அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து அடுத்தடுத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்கள படையினரின் சுற்றி வளைப்பில் முல்லைத் தீவில் சிக்கித் தவிக்கும் ஐந்து லட்சம் தமிழர்களையும் காப்பாற்ற இந்திய அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்யத் தவறினால் ஆட்சியை இழக்கவும் தயார் என சூளுரைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஈழத் தமிழினத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில் உண்மையான அக்கறையுள்ள கட்சிகள் தி.மு.க. அரசையும் காப்பாற்ற வேண்டியது தவிர்க்க முடியாத கடமையாகும். குறிப்பாக, தி.மு.க. அரசுக்கு ஆதரவு நல்கி வருகிற காங்கிரஸ் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டால் தி.மு.க. தமது ஆட்சியை இழக்க நேரிடும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

காங்கிரசுடன் முரண்படாமல் இந்திய அரசை பகைத்து கொள்ளாமல் இயன்றவரையில் நல்லிணக்கத்தோடு இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டுமென தமிழக முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளால் எள்முனை அளவும் பயனில்லை என்கிற நிலையில் காங்கிரசுடன் முரண்படும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியான சூழலை தி.மு.க. எதிர்கொள்ள நேரிடுகிறது.

இத்தகைய சூழலில் தி.மு.க. ஆட்சியை இழந்து இச்சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை விட ஆட்சியை இழக்காதவாறு தி.மு.க.விற்கு துணை நிற்க வேண்டியது இன நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கடமையாகும். ஆகவே, இந்திய அரசை பணிய வைத்து ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டுமானால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் இடதுசாரிகள் விரைந்து முன்வரவேண்டும்.

கடந்த கால அரசியல் கசப்புக்களை கடந்து ஈழத் தமிழ் தேச சொந்தங்களை காப்பாற்ற மனித நேய அடிப்படையில் இன நலன் காக்கும் ஒரு இறுதிப்போரை நடத்த வேண்டியது வரலாற்று தேவையாக உள்ளது. எனவே எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லாமல் விடுதலை சிறுத்தைகள் விடுக்கும் இந்த வேண்டுகோளை மேற்கொண்ட தோழமைக்கட்சிகள் பணிவோடு பரிசீலிக்க வேண்டும் எ‌ன்று தொ‌ல். ‌திருமாவள‌வ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.