இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்று 2வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில், சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மேலும், சாலை மறியலில் ஈடுபடவும் அவர்கள் முயன்றனர். ஆனால், காவல்துறையினர் மறியல் போராட்டத்திற்கு அனுமதி தராததால் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதேபோல சென்னை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.