சென்னை எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 4 மணிக்கு மேட்டூர் புறப்பட்ட ஒரு சரக்கு ரயில் ஒன்று மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு டிராய்லர் லாரி காட்டுப்பள்ளி சாலையில் உள்ள ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் ரயில் வந்தது லாரி ஓட்டுனருக்கு தெரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் லாரி மீது ரயில் மோதியது.
இதில் லாரி துண்டு துண்டாக நொறுங்கியதுடன் ஓட்டுனர் குமார் (35) பலத்த காயம் அடைந்தார். கிளீனர் முருகேசன் காயத்துடன் உயிர் தப்பினார். ரயிலை ஒட்டி வந்த ஓட்டுனர் ராம்குமாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த லாரி ஓட்டுனர் மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.