ஆளுநர் உரை தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் ஒளியூட்டுகிறது: தங்கபாலு
'தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் ஒளியூட்டுவதாக ஆளுநர் உரை அமைந்துள்ளது' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முழு மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தி இன்றைக்கு (நேற்று) எனது தலைமையில் உண்ணாவிரதம் இருந்து வரும் இந்நன்னாளில், தமிழகத்தில் முழு மதுவிலக்கு முயற்சிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் என்றும், கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்து 300 மதுக்கடைகள் மூடப்பட்டன என்றும் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியை வரவேற்கிறோம். மேலும், கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரத்து 220 ரூபாய் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
மத்திய அரசு ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்திற்கு 690 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்ததற்கும், சென்னை விமான நிலைய விரிவாக்கம், துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கு ரூ.1,655 கோடி ஒப்புதல், திருச்சி, கோவை, திருவாரூர் ஆகிய இடங்களில் மத்திய பல்கலைக்கழகம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.908 கோடி ஒப்புதல், காவிரி-குண்டாறு இணைப்புக்கான கட்டளை கதவணைக்கு ரூ.165 கோடிக்கு ஒப்புதல் போன்ற பல்வேறு தமிழக வளர்ச்சி நலனுக்கான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கவர்னர் உரையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இன்றைய நிலையில், இலங்கை தமிழர்கள் பிரச்சனை மத்திய அரசு பேச்சுவார்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையை ஆளுநர் உரை மூலம் தெரிவித்திருப்பது அனைவராலும் ஏற்கப்பட்டு மிகுந்த வரவேற்புக்குரியது.
தமிழகத்தில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்படும் என்றும், ஏழை-எளிய மக்களின் மருத்துவ செலவுக்கு அரசு செலவிலேயே லட்சம் ரூபாய் அதில் காப்பீடு செய்யப்படும் என்று அறிவித்திருப்பது ஏழைகளின் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஆகும்.
மத்திய அரசும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசும் இணக்கமான உறவுடன் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருவதன் காரணமாகத்தான் தமிழகம் அனைத்து தரப்பான மக்களுக்கும், அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் சிறப்பான வெற்றியை பெறமுடிகிறது. தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் ஒளி ஊட்டுவதாக ஆளுநர் உரை அமைந்துள்ளது என்று தங்கபாலு கூறியுள்ளார்.