ஆளுந‌ர் உரை 'கலைஞ‌ரி‌ன் கடித‌ம்' : ராமதாஸ்

சட்டப்பேரவை 'ஆளுந‌ரி‌னஉரை' இன்னொரு 'கலைஞரின் கடிதம்' என்று சொன்னால் மிகையாகாது எ‌ன்று பா.ம.க. ‌‌நிறுவன‌ர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவை 'ஆளுந‌ரி‌ன் உரை' இன்னொரு 'கலைஞரின் கடிதம்' என்று சொன்னால் மிகையாகாது. ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வந்துள்ள சூழ்நிலையில் இங்கே இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், எளிதில் நிறுத்திவிடக் கூடிய திட்டங்களையும், தற்காலிகமானவை என்று அறிவிப்பு செய்து அளித்து வரும் சலுகைகளையும், அரசின் சாதனைகள் என்று பட்டியலிட்டு தன்னைத்தானே அரசு பாராட்டிக் கொண்டிருக்கிறது.

மாநிலத்தின் வளர்ச்சி, மாநில மக்களின் முன்னேற்றம், தாய் மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழினப் பாதுகாப்பு, நதி நீர் பிரச்சனைகள், வறுமை ஒழிப்பு, ஏழை, எளிய மக்களை வறுமைக் கோட்டு நிலையிலிருந்து உயர்த்துதல், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குதல் ஆகியவற்றில் இந்த அரசு சாதித்துள்ளவை என்ன? அதனால் ஏற்பட்டுள்ள பயன் என்ன?

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறதா? கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசு நிறைவேற்றியுள்ள சாதனைகளால், மாநில மக்களின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறதா? கல்வியில், அடிப்படை சுகாதாரத்தில், குடிநீர் வழங்கலில், வீட்டு வசதியில் எந்த அளவுக்கு மாநிலம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பது பற்றியெல்லாம் ஆளுநர் உரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் இந்த ஆட்சியில் நடந்த மூன்று இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றிகளை இந்த அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்த மதிப்புரை என்று உரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது.

இடைத்தேர்தல் வெற்றி எல்லாம் ஆட்சிக்கு மக்கள் எழுதிய மதிப்புரை என்றால், அடுத்து நடந்த பொதுத் தேர்தல்களில் ஆட்சி மாற்றங்களே ஏற்பட்டிருக்காது. இடைத் தேர்தல் வெற்றி ஆட்சிக்கு மக்கள் அளித்த மதிப்புரை என்பது யதார்த்த நிலைக்கு மாறானது.

முழு மதுவிலக்கைக் கொண்டு வருவது லட்சியம் என்றும் அதனை எய்திடுவதற்கான முயற்சிகளைப் படிப்படியாக மேற்கொள்ளப் போகிறோம் என்றும் அறிவித்துவிட்டு இன்னும் முதல் படியிலேயே இருந்து கொண்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. படிப்படியான நடவடிக்கைகளை ஆளுநர் உரையில் அறிவிக்காதது முழு மதுவிலக்கு என்பது வெறும் கண்துடைப்பாகிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கல்வியில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வரும் இன்றைய பாடத்திற்குப் பதிலாக, கல்வி முறைக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே விதமான தரமான கல்வியை வழங்க வழி செய்யும் சமச்சீர் கல்வி முறை இந்த கல்வி ஆண்டிலாவது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்த்து ஏங்கி நிற்போருக்கு கவர்னர் உரையில் அதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இடம் பெறாதது பெரும் கவலையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மாநிலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெயர்களைப் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டி நிற்கிறது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கியிருப்பதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பும் யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான்.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி வருகிற மார்ச் மாதத்தில் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இறுதியாக்கப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

மார்ச் மாதம் திட்டப்பணிகள் தொடங்கப்படுமா? என்பது குறித்து திட்டவட்டமான அறிவிப்பு எதுவும் இல்லாதது தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே தரும். இடஒதுக்கீட்டில் பொருளாதார நிலையை அளவுகோளாக கருதாமல், சமூக நிலையை மட்டும் கருதி பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் இடஒதுக்கீடு பெற வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும்; ஆதிதிராவிடர்களுக்கு இணையாக கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களையும் அட்டவணைப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினருக்கு தேசிய அளவில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; மைய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழை வழக்கியல் மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்று பாராட்டக் கூடியவை. மொத்தத்தில் இந்த ஆண்டு ஆளுந‌ர் உரையில் குறைகள் நிறைவாக இருக்கின்றன. நிறைகள் குறைவாக இருக்கின்றன எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்