ஈழத்தில் போர் நிறுத்தம் பற்றி குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது: திருமாவளவன்

வியாழன், 22 ஜனவரி 2009 (09:39 IST)
த‌மிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில், ஈழத்தமிழர் சிக்கல் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கூறப்படவில்லை எ‌ன்று‌ம் சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் கூட போர் நிறுத்தம் குறித்து வெளிப்படையாக பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது எ‌ன்று‌ம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், சட்டப் பேரவை கூட்டத்தில் ஆளுந‌ர் ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்டுள்ள "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம்'' வரவேற்கத்தக்க ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் குடும்பம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவம் பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

புற்றுநோய், இதயநோய், சிறுநீரக கோளாறு, மூளை மற்றும் முதுகுத் தண்டு பாதிப்பு, உயிருக்கு ஆபத்தான விபத்துக்களுக்கான மருத்துவம் போன்றவை இத்திட்டத்தில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நோய்களுக்கு மருத்துவம் செய்து கொள்வதற்கு இந்த தொகை மிகவும் குறைவானதாகும்.

எனவே, குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தை பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களோடு இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களோடு இணைந்து நடைமுறைப்படுத்த கூடாது.

ஈழத்தமிழர் சிக்கல் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கூறப்படவில்லை. சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் கூட போர் நிறுத்தம் குறித்து வெளிப்படையாக பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தொ‌ல். ‌திருமாவளவ‌ன் தெரிவித்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்