சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூரில் செயல்படுத்தப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவுற்று, இத்திட்டம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையில், சென்னை மாநகரின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றை மாநில அரசு செயல்படுத்திட, மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் என 2004-2005 ஆம் ஆண்டு மைய அரசு அறிவித்திருந்தது. 2006 ஆம் ஆண்டில் இந்த அரசு பதவியேற்றவுடன், ஆய்வுப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது.
இதன் அடிப்படையில், தற்போது ரூபாய் 908 கோடி செலவில் சென்னை அருகேயுள்ள நெம்மேலியில், நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் அளவிற்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்திட அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்திட்டப் பணிகள் விரைவாகச் செயல்படுத்தப்படும். மேலும், மீஞ்சூரில் செயல்படுத்தப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவுற்று, இத்திட்டம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று ஆளுநர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.