இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு வழிகாண வேண்டும்: தமிழக அரசு
இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர், அங்கு இனப் பிரச்சனையைத் தீர்க்க உதவாது என்று கூறும் மத்திய அரசு, அங்கு வதைபடும் தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், இந்த ஆண்டு கூட்டத்தொடரை தொடங்கி வைத்துப் பேசிய மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு வைப்பதாக கூறினார்.
இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு இனியும் காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொள்வதாகவும் ஆளுநர் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரை : இலங்கையில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு பசி பட்டினியால் வாடுகின்ற தமிழ் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை அனுப்பிட, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கென ரூபாய் 48 கோடி அளவிற்கு நிதியைத் திரட்டி, உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருள்களை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ்வதற்கு சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அல்லற்படுவதை அகற்றி; பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை இனியும் காலந்தாத்தாது மேற்கொண்டு நாளும் வதைபடும் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தவாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.
இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையால் தமிழ்நாட்டில் அகதிகளாக 73,300 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்றவுடன் இவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை, மத்திய அரசின் நிதியுதவி பெற்று இரு மடங்காக உயர்த்தியதோடு, இம்முகாம்களில் உள்ள அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தியுள்ளது.
இவர்களின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. தாயகம் திரும்ப இயலாது, தொடர்ந்து அகதிகளாக வாழ நேரிட்டுள்ள இவர்களது தங்குமிடங்களின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த இந்த அரசு ஆவன செய்யும் என்று ஆளுநர் பர்னாலா தமது உரையில் உறுதி கூறியுள்ளார்.