இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியலை பற்றியும், கூட்டணி பற்றியும், தேர்தல் பற்றியும் சிந்திப்பவர்கள் தமிழர்களே அல்ல என்று தெரிவித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முதலமைச்சர் கருணாநிதி ஏதாவது வழி காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் கோ.க.மணி முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இலங்கை அரசை கண்டித்தும், இந்திய அரசு தலையிட வலியுறுத்தியும் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய ராமதாஸ், கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது; இதோடு இலங்கை தமிழ் இனம் முடிந்து விட்டது என சிலர் மமதையோடு பேசுகிறார்கள். ஆனால், தமிழக தமிழர்களும், உலக தமிழர்களும் நிச்சயம் அதனை நம்ப மாட்டார்கள். தமிழனுக்கு வீழ்ச்சியில்லை. தமிழனுக்கு தோல்வியும் இல்லை. இங்கே உள்ள சிலர் ஈழத்தமிழர்கள் அழிய வேண்டும், சிங்களர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ் இன உணர்வுள்ள யாரும் அப்படி நினைக்க மாட்டார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். தமிழர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றோர் தெரிந்து வைத்திருந்தார்கள்.
ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். அங்கு நடைபெறுவது ஈழத்தமிழர்களின் உரிமைப்போர். அங்கு நடைபெறும் கொடுமைகளை பார்த்தால் கல்நெஞ்சம் கொண்டவர்களும் ஏற்க மாட்டார்கள். ஈழத்தமிழர்கள் அந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள் என்பதை இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் அறிவார்கள்.
இலங்கை தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் பாரம்பரிய உறவு உண்டு. அந்த அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். உலக நாடுகளும் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
நார்வே நாடு இருதரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூட, ராணுவ தீர்வு கூடாது, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், போரை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர அனைத்துக்கட்சிகள் சார்பில் பிரதமரை சந்தித்தோம். அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டியதில்லை. போரை நிறுத்துங்கள் என்று இலங்கை அரசுக்கு போனில் சொன்னாலே போதும் போரை நிறுத்தி விடலாம்.
ஆனால், ராஜபக்சேவை சந்திக்க சிவசங்கர்மேனனை அனுப்பினார்கள். இவர் அங்கு சென்று இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மிக நெருக்கமான, மிக ஆழமான உறவு இருப்பதாக கூறிவிட்டு வந்துள்ளார். தமிழர்களை அழித்து வரும் இலங்கை ராணுவ தளபதி பொன் சேகாவை பாராட்டி விட்டு வந்திருக்கிறார். இந்த கொடுமையை என்னவென்று சொல்வது. இதற்காக சர்வக்கட்சிகளும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் சொன்னால் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதி செய்கிறேன் என்று சொல்கிறார்கள்.
ஆட்சியில் பங்கு வேண்டாம், தி.மு.க ஆட்சி 5 ஆண்டுகளும் நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவேன் என்று சொன்ன நானா, ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் சதிகாரன், நிச்சயமாக யார் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும் அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். ஐந்து ஆண்டுகள் தி.மு.க ஆட்சி தொடர ஆதரவு என்ற வாக்குறுதியில் இருந்து நாங்கள் மீற மாட்டோம்.
இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியலை பற்றியும், கூட்டணி பற்றியும், தேர்தல் பற்றியும் சிந்திப்பவர்கள் தமிழர்களே அல்ல. நீங்கள் (கருணாநிதி) தமிழக முதலமைச்சர் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் தலைவர். எனவே நீங்கள் தான் ஈழத்தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற ஏதாவது வழி காண வேண்டும். உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம் என்று மீண்டும், மீண்டும் வேண்டுகோள் விடுகிறேன்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் மாணவ- மாணவிகள் ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.