21ஆம் தேதி தடையை மீறி விவசாயிகள் 'கள்' இறக்கும் போராட்டம்
நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் 'கள்' இறக்கும் போராட்டம் தடையை மீறி நடத்துவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு 'கள்' இயக்கத்தின் கூட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு பின்ன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 47 ன் படி 'கள்' இறக்குவதற்கும் அதை விற்பதற்கும் அரசு தடைவிதிக்க கூடாது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகையில் 42.8 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. ஆனால் கள்ளில் 4.5 சதவீதம் மட்டுமே உள்ளது.
'கள்' இறக்குவதால் பத்து லட்சம் மரம் ஏறும் தொழிலாளர்களும், ஐம்பது லட்சம் விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். தாய்பாலில் மட்டுமே உள்ள லோரிக் அமிலம் கள்ளில் உள்ளது. இதனால் இலங்கை, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 'கள்' அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆகவே ஜனவரி 21ஆம் தேதி திட்டமிட்டபடி தடையை மீறி 'கள்' இறக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். இதற்கு ம.தி.மு.க., பா.ஜ.க., சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 60 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று நல்லசாமி கூறினார்.