தி.மு.க. ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள காட்டாங்குளத்தூர் தி.மு.க. ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரை மர்ம மனிதர்கள் இன்று காலை வெட்டிக் கொன்றனர்.
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக இருந்த முனிராசு (58) இன்று காலை தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்று வீடு அருகே வந்த போது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது.
அவர்களிடம் தப்பி ஓடிய முனிராசுவை விடாமல் துரத்தி சென்ற கும்பல் வீட்டு வாசலிலேயே வெட்டிக் கொன்றது. முனிராசுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் காரில் தப்பி சென்றது.
இது பற்றி தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு கூடுதல் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ருபேஸ்குமார் மீனா, மறைமலைநகர் காவல்துறை ஆய்வாளர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் முனிராசுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.