கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு: வைகோ

தமிழகம் முழுவதும் வரு‌ம் 21ஆ‌ம் தேதி நடைபெறும் 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தரும் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் வைகோ அ‌றி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு 'கள்' இயக்கப் பேரமைப்பு, தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து 'கள்' இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி வருகின்ற 21ஆ‌ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்த உள்ள 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் வரும் வருமானத்தை காரணம் காட்டி அய‌ல்நாட்டு வகை மதுவை நாடெங்கும் மக்கள் குடிப்பதை அரசாங்கமே ஊக்குவித்து வருகிறது. இதனால் ஒரு தலைமுறை வாழ்வே பாழாகிறது. இந்த நிலைப்பாடு அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இந்த நிலையில் 'கள்' இறக்கத் தடை விதிப்பது நியாயமற்றது.

ஏனென்றால், அயல்நாட்டு மதுபான போதை அளவை கணக்கிடும்போது கள்ளில் போதைத்திறன் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்றும் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

'கள்' இறக்க அனுமதி அளிக்கப்பட்டால் சுமார் 10 லட்சம் விவசாய தொழிலாளர்களும், தென்னை மற்றும் பனை மரங்களால் பயன் இன்றிப் பரிதவிக்கின்ற சுமார் 50 லட்சம் விவசாய குடும்பங்களும், பனை ஏறுவதையே தொழிலாகக் கொண்டுள்ள சுமார் 2 லட்சம் தொழிலாளர்களும் நேரடியாக பயன்பெறுவர்.

ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு உள்ளது. கட்சியின் அவைத் தலைவரும், சட்டமன்ற கட்சி தலைவருமான மு.கண்ணப்பன் 'கள்' இறக்க அனுமதிகோரி சட்டமன்றத்தில் குரல் எழுப்பியதோடு இப்போராட்டத்தை ம.தி.மு.க. தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறது. ஜனவரி 21ஆ‌ம் தேதி நடைபெறும் 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு ம.தி.மு.க. முழுமையான ஆதரவை தெரிவித்துகொள்கிறது.

இப்போராட்டத்தை ஒடுக்க அரசு அடக்குமுறையை பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிப்பதோடு, அடக்குமுறை ஏவப்பட்டால் ஆங்காங்கே உள்ள கட்சியின் சட்டத்துறையினர் விரைந்து செயல்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.