இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு இரும்புக் கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் காளவாய்க்கரை என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த குடிசைகளுக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் குடிசைகளுக்குள் இருந்தவர்களான சின்னத்தம்பி என்பவரின் மனைவி சிந்தாமணி, சிவசாமி என்பவரின் மனைவி கனகவல்லி, அவரது மகள் கனிமொழி, மகன் சந்தோஷ், சேரன் என்பவரின் தாயார் கோவிந்தம்மாள், அவரது மனைவி சித்ரா, ஆறுமுகம் என்பவரின் மகள் அட்சயா, நாடிமுத்து என்பவரின் மனைவி மல்லிகா மற்றும் நடராஜன் ஆகிய ஒன்பது பேர் உயிரிழந்த தகவல் தமக்குக் கிடைத்தவுடன் மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ள முதலவர் கருணாநிதி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்விபத்தில் பலியான ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் அவர்களது குடும்பங்களுக்கு மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியாக வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று (18.1.2009) ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.