இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் ஏமாற்றம் தருவதாக தெரிவித்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், அடுத்தது என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும், அந்த முடிவு நாட்டையே அசைக்கும் முடிவாக, உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இலங்கையில், சண்டை நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
அவர் உண்ணாநிலை இருந்து வரும் மறைமலை நகருக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்த இராமதாஸ், அவரது உடல் நலம் கருதி உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
பின்னர் அங்கு பேசிய அவர், அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், கொழும்பில் அந்நாட்டு அயலுறவு அமைச்சரைச் சந்தித்து என்ன பேசினார் என்பது குறித்து அந்நாட்டின் அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை "இந்து'' நாளேட்டில் வெளிவந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
"சிறிலங்காவுடனான இந்திய உறவு இதுவரையில் இல்லாத அளவிற்கு ஆழமாகவும், உறுதியாகவும் மாறியிருக்கிறது என்றும் மிகவும் இக்கட்டான காலங்களில்தான் நட்பின் உண்மையான தன்மை வெளிப்படும் என்றும் அதற்கு சிறந்த உதாரணமாக சிறிலங்காவுடனான இந்திய உறவு திகழ்கிறது என்றும் சிவசங்கர் மேனன் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று "இந்து" நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது.
சிறிலங்காவுடனான நட்பு ஆழமாகவும், உறுதியாகவும் இப்போது மாறியிருக்கிறது என்று சிவசங்கர் மேனன் கூறியிருப்பதை வாக்குமூலம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை சிவசங்கர் மேனனின் இந்த அறிவிப்பு புலப்படுத்துகிறது" என்று குறிப்பிட்ட இராமதாஸ், இவரது பயணத்தைத்தான் முக்கியமான நிகழ்வு என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.
நம்புவோம், காத்திருப்போம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார் என்றும் கூறிய இராமதாஸ், இதற்கு மேலும் நாம் எப்படி நம்ப முடியும். காத்திருக்க முடியும் என்றும் வினா எழுப்பினார்.
அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் மற்றும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லிக்குச் சென்று முறையிட்டிருக்கிறோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அங்கே சண்டை நிறுத்தப்படவில்லை. வெட்கத்தாலும், வேதனையாலும் தலைகுனிந்து நிற்கிறோம் என்ற இராமதாஸ், இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க முதலமைச்சர் கலைஞர் பல்வேறு கால கட்டங்களில், பாடுபட்டிருக்கிறார் என்றும் இப்போதும் அவர்களைக் காக்க அவரைத்தான் அவர்களும், இங்குள்ள தமிழர்களும் நம்பியிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
நம்மிடையே அரசியல் கருத்து வேறுபாடுகளும் கூட்டணி வேறுபாடுகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு கலந்தாய்வு நடத்தி முடிவெடுப்போம் என்று அவர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். நல்ல முடிவெடுப்போம். அந்த முடிவு நாட்டையே உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும். முடிவெடுத்து முதல்வரை செயற்பட வைப்போம் என்றும் வலியுறுத்தினார் மருத்துவர் இராமதாஸ்.
உண்ணாநிலையை கைவிடுமாறு இராமதாஸ் கோரிக்கை
உண்ணாநிலை மேற்கொண்டு வரும் திருமாவளவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சோர்வு ஏற்பட்டிருக்கிறது. குருதியில் சர்க்கரையின் அளவு குறைந்து வருகிறது. இதற்கு மேலும் குறைந்தால், நிலைமை மோசமாகிவிடும். இதனை ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர் தனது உண்ணாநிலையை உடனடியாக கைவிட வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.