நாம் சாகப் பிறந்தவர்கள் அல்ல, தமிழனை கொல்பவர்களை சாகடிக்க பிறந்தவர்கள் என்று கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ஒவ்வொரு தமிழனும் வீர மரணம் அடைவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை வாழ்த்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், இலங்கையில் நடக்கும் போரை உடனடியாக தடுத்து நிறுத்தத்தான் மத்திய அரசை வலியுறுத்தினோம்.
சிங்களவர்கள் மீது குண்டுபோடச் சொல்லவில்லை. சந்திரனுக்கு இந்தியா சந்திராயனை அனுப்பியது. அதைப் போல இலங்கையை நோக்கி ஏவுகணையை இந்தியா வீசத் தேவையில்லை. இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து கொன்று குவித்தால் ஏவுகணை வீசுவோம் என்று இந்தியா பூச்சாண்டி காட்டினாலே போதும், அங்குள்ள சிங்களவன் இந்தளவுக்கு ஆட்டம் காட்டுவானா?
இப்போது இலங்கையில் தர்மயுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. திருமாவளவனை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் உங்கள் உடல் நலம் கருதி நீங்கள் இந்த உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிட வேண்டும். இலங்கையில் போரை நிறுத்துமாறு நாம் இங்கே அறப்போராட்டத்தை நடத்திக் கொண்டிக்கிறோம்.
மத்திய அரசை நம்பி திருமாவளவன் இத்தகையை மாபெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நாம் சாகப் பிறந்தவர்கள் அல்ல, தமிழனை கொல்பவர்களை சாகடிக்க பிறந்தவர்கள். நான் இதை மேடை அலங்காரத்திற்காக சொல்லவில்லை.
ஒவ்வொரு தமிழனும் வீர மரணம் அடைவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் தமிழனைக் காக்கும் போராட்டத்திற்கு ஒரு தீர்வாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று தா.பாண்டியன் பேசினார்.