உண்ணாவிரதத்தை கைவிட திருமாவளவனுக்கு கருணாநிதி வேண்டுகோள்
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3வது நாளான உண்ணாவிரதம் இருந்து வரும் தொல்.திருமாவளவனை இன்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
50 ஆண்டு காலமாக நீடித்து வரும் இலங்கை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் கருணாநிதி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் என்று செய்தியாளர்களிடம் கூறிய ஆற்காடு வீராசாமி, உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிட வேண்டுமென முதலமைச்சர் சார்பில் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
பின்னர் ராமதாஸ், திருமாவளவனின் ரத்த அழுத்தத்தை சோதித்து பார்த்தார். ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக உள்ளது என்று கூறிய ராமதாஸ், உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருமாவளவன் என்னிடம் தெரிவித்தார் என்றார்.
இன்றே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் நாளை கட்சியின் நிர்வாகிகளை கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளார் என்றார்.
இவர்களை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன், திருமாவளவனை சந்தித்துப் பேசினார்.