திருச்சியில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு நேற்றிரவு லாரி ஒன்று இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
மன்னார்குடி அருகே காளவாய்கரை என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனர் ஜெயபால் கட்டுப்பாட்டில் இருந்து லாரி விலகி தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது.
இதில் சிவசாமி என்பவர் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி கனகவல்லி (38), மகள் கனிமொழி (14), மகன் சந்தோஷ் (12), சிவசாமியின் மாமியார் சிந்தாமணி (80), உறவினர்கள் கோவிந்தம்மாள் (58), நடராஜன் (55), சித்ரா (28),அட்சயா (4) ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார்கள். சிவசாமி பலத்த காயம் அடைந்தார்.
அருகில் இருந்த மற்றொரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மல்லிகா (40), அபிராபி, சுதாகர் (20), விவேக் (17), வசந்தா, அதே பகுதியை சேர்ந்த பார்வதி, லாரி கிளீனர் மகேஷ்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.