தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 5 பேர் பலி; 500 பேர் காயம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி 5 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பாலக்குறிச்சியை அடுத்த ஆவாரங்காட்டில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 205 காளைகள், 166 வீரர்கள் பங்கேற்றனர்.
சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்க முயன்றனர். அப்போது காளைகள் முட்டியதில் 60 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
காளைகள் திமிறிக் கொண்டு சென்று, வேடிக்கை பார்த்தவர்களையும் முட்டித் தள்ளியது. இதில், சிவகங்கை மாவட்டம் வாராப்பூரைச் சேர்ந்த செல்வராஜ் அதே இடத்தில் பலியானார். வேடிக்கை பார்க்க வந்த சீரங்கம்பட்டியைச் சேர்ந்த பெரியய்யா, குடைகுறிச்சிப்பட்டியைச் சேர்ந்த பாலு ஆகியோரும் காளை முட்டியதில் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் இறந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் செல்லையா (55) என்பவரும், ஆலங்குடி வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சுரேஷ் (23) என்பவரும் மாடு முட்டியதில் பலியானார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாக்களில் மட்டும் 300 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற 75 பேர் காயம் அடைந்தனர். சாணார்பட்டி அருகில் உள்ள நத்தமாடிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம் மற்றும் பொட்டிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 35 பேர் காயம் அடைந்தனர். பொட்டிரெட்டிபட்டியில் துள்ளிக்குதித்து வந்த ஒரு காளையின் கயிற்றில் கால் பட்டதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயராகவன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருடைய கண் அருகே காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.