காணும் பொங்கலையொட்டி சென்னை மெரீனா கடற்கரைக்கு இன்று காலை முதலே மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். நேரம் போகப்போக மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கும் பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காட்சி அளித்தது. அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடற்கரையையொட்டி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தாண்டி பொது மக்கள் கடலுக்குள் சென்று விடாமல் தடுப்பதற்காக குதிரைப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்கள், திருடர்களை பிடிக்க பல இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை தீவுத்திடல், கிண்டி சிறுவர் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் ஏராளமான மக்கள் தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை கழித்தனர்.
பொதுமக்கள் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கியது.