நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அலங்காநல்லூரில் இன்று காலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் மனித உயிர்பலி ஏற்படுவதாகவும், மிருகவதை நடைபெறுவதாகவும் பிராணிகள் நல அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதுதொடர்பான வழக்கில், ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
விதிமுறைகளுக்குட்பட்டு முறையாக ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், அலங்காநல்லூரில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட காளைகளே ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அனுமதிக்கப்பட வேண்டும். காளைகளுக்கு போதை வஸ்துக்கள், மருந்துகள் கொடுக்கக் கூடாது. ஒரு காளையை 4 பேருக்கு மேல் சேர்ந்து அடக்கக் கூடாது. காளைகள் ஓடுவதற்கும், அதனை அடக்கும் வீரர்களுக்கும் போதுமான இடவசதி செய்து தர வேண்டும்.
காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவும், மருந்து வசதிகளுடன் ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மது அருந்திய வீரர்களை அனுமதிக்கக் கூடாது. மிருகவதை தடுப்புச் சட்டத்தின்படி விதிமீறல் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
விதிமீறல் இருக்கும் பட்சத்தில் விழா குழுவினரே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி, பாலமேடு, அவனியாபுரம், கிடாரிபட்டி, மேலூர், அழகர்கோவில், நத்தம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 900 காளைகள் வந்திருந்தன. அவை முறைப்படி பதிவு செய்யப்பட்டு போட்டிக்கு தயார்படுத்தப்பட்டன.
இதேபோல மாடுபிடி வீரர்களாக 500 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதி முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பிராணிகள் நல வாரியத்தினர் வந்திருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வீடியோ படமும் எடுத்தனர்.
வாடிவாசலுக்கு வெளியே பதிவு செய்த அடையாள பனியன் அணிந்திருந்த மாடுபிடி வீரர்கள் காத்திருந்தனர். அவர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை துரத்திச் சென்று திமிலை பிடித்து அடக்க முயன்றனர். ஆனாலும் அந்த காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை ஆக்ரோஷத்துடன் முட்டி தூக்கி வீசியது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடி கொடுக்காமல் சென்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வேட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
இந்த போட்டி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுப்போட்டியையொட்டி ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.