தஞ்சை மாவட்டம், பூதலூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை குத்தி ஒருவர் பலியானார். மேலும் 25 பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் குத்தி வீசியதில் 111 வீரர்கள் காயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், பூதலூர் அக்ரகாரம் வீதியில் நடந்த ஜல்லிக்கட்டில் போட்டியில் காளை முட்டியதில் பூதலூர் மேல அம்பலகாரத் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் (20) என்பவர் குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பரிதாபமாக இறந்தார்.
மேலும் மாடுகள் முட்டியதில் 25 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்ட முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாடுமுட்டி இறந்த முருகானந்தம் விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்காக கம்பம், தேனி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், திண்டுக்கல், நத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 380 காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, 10 காளைகளுக்கு அனுமதி மறுத்தனர்.
மீதியுள்ள 370 காளைகள் அதிகாலையில் இருந்தே கம்பீரமாக கிராமத்தை வலம் வந்து அணி வகுத்து நிறுத்தப்பட்டன. மழை காரணமாக சற்று தாமதமாக காலை 11.10 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலாவதாக, மகாலிங்கசாமி கிராம பொதுமடத்துக் கமிட்டியின் காளையும், அடுத்து மஞ்சமலை சாமியின் காளையும் அவிழ்த்து விடப்பட்டன. கிராம விதிப்படி இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.
பின்னர், ஒவ்வொரு காளையாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, தயாராக காத்திருந்த மாடுபிடிவீரர்கள் வேகத்துடன் பாய்ந்து அடக்கி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். சில காளைகள் எதிர்ப்பவர்கள் அனைவரையும் முட்டித் தள்ளிவிட்டு நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்தன. மாடுகள் முட்டியதில் 111 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் தாஸ் (28), சோலைராஜ் (24), ராமலிங்கம், மஞ்சமலை சந்திரன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கக்காசு, சைக்கிள், கட்டில், பீரோ மற்றும் ரொக்கப்பணம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. புளூகிராஸ் அமைப்பினர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வீடியோ படம் எடுத்தனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் சீத்தாராமன் துவக்கி வைத்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆர்.டி.ஒ ஜெயராஜ், உதவி ஆட்சியர் ஞானசேகரன், தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் கண்காணித்தனர்.
ஆறு டி.எஸ்.பி.கள் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர கிராம கமிட்டியை சேர்ந்த 125 பேர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.