இலங்கையில் போரை நிறுத்த திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதம்
வியாழன், 15 ஜனவரி 2009 (14:46 IST)
இலங்கையில் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், மத்திய அரசு சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினார்.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் இன்று அதிகாலை 4 மணிக்கு திருமாவளவன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தனது உண்ணாவிரதம் சாகும்வரை நீடிக்கும் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
உண்ணாவிரதத்தை கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
ஈழத்தமிழர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.