திருவள்ளுவர் திருநாள்: 9 பேருக்கு தமிழக அரசு விருது
வியாழன், 15 ஜனவரி 2009 (13:37 IST)
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 9 பேருக்கு இன்று விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறந்த நூல் ஆசிரியர்கள், பதிப்பகத்தாருக்கு பரிசுகளையும், தமிழ் அறிஞர்களுக்கு நிதியுதவி ஆணைகளையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்க உள்ளார்.
விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் பரிதி இளம்வழுதி உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
பொற்கோவுக்கு திருவள்ளுவர் விருதையும், ஞான.ராஜசேகரனுக்கு பெரியார் விருதையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்க உள்ளார்.
இதேபோல் அம்பேத்கர் விருதை சோலை (எ) சோமசுந்தரமும், அறிஞர் அண்ணா விருதை மறைமலையான் ஆகியோர் பெறுகிறார்கள்.
காமராஜர் விருது கோபண்ணாவுக்கும், பாரதிதாசன் விருது தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, திரு.வி.க. விருது அருளானந்தத்திற்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பழமலைக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுடன், ரூ.ஒரு லட்சம் பொற்கிழி, தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.