இலங்கை போரை நிறுத்துங்கள்: பிரதமருக்கு வைகோ கடிதம்

வியாழன், 15 ஜனவரி 2009 (13:25 IST)
ஈழத் தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வைகோ எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைத் தீவில் ரத்த வெறிபிடித்த இனவாத அரசு தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க முப்படைகளை ஏவி யுத்தம் நடத்துகிறது. விடுதலைப் புலிகளுடன் போர் என்ற பெயரால் இந்த இனப்படுகொலையை நடத்தப்படுகிறது.

சுமார் 6 லட்சம் தமிழர்கள் முல்லைத் தீவில் மரண பயத்தில் தவிக்கின்றனர். சிறிலங்கா ராணுவம் இடைவிடாமல் பீரங்கித் தாக்குதலும், விமானத் தாக்குதலும் நடத்துகிறது. அதில் அப்பாவித் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் கொல்லப்படுகின்றனர். உணவும், மருந்தும் இன்றி பலர் செத்து மடிகின்றனர்.

சிறிலங்கா அரசின் ராணுவத் தாக்குதலுக்கு இந்திய அரசு திட்டமிட்டு தொடர்ந்து முழு அளவில் உதவி வருகிறது என்று நான் மிகுந்த வேதனையோடு குற்றம்சாட்டுகிறேன். சிறிலங்க விமானப் படைக்கு ராடார்களைத் தந்தது, சிறிலங்க ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தது, இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பி ராணுவ நடவடிக்கைக்கு உதவியது, பலாலி விமானதளத்தை பழுது பார்த்து கொடுத்தது, வட்டியில்லாத கடனாக ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தது, அதன் மூலம் சீனா, பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதம் வாங்க உதவியது என்று சிறிலங்க அரசுக்கு இந்தியா பல வகைகளில் உதவி செய்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், தமிழகத்தின் அரசியல் கட்சிகள், கலை, இலக்கியத் துறையினர் போராட்டங்கள் நடத்தியும் இந்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது. மாறாக வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல சிறிலங்க அரசுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

முல்லைத் தீவில் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கி உள்ள சுமார் 6 லட்சம் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு உலகத் தமிழர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உதவியால் ராஜபக்ச அரசு நடத்தும் தமிழினக் கொலையைத் தடுத்து நிறுத்துங்கள். இந்த நியாயமான கோரிக்கையை நிராகரித்தால் தமிழர்களும், எங்கள் சந்ததிகளும் இந்திய அரசின் துரோகத்தை எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்