பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு செயலாக்க ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் திருநாளையொட்டி தி.மு.க. அரசினால் செயலாக்க ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளாக கொண்டாடப்படும் இந்த ஆண்டில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறுவோர், நேரடி நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள், சுமை தூக்குவோர், தற்செயல் பணியாளர்கள் ஆகிய நிலைகளில் பணிபுரியும் 29 ஆயிரத்து 566 பணியாளர்களுக்கு 2007-08-ம் ஆண்டுக்கான செயலாக்க ஊக்கத் தொகையாக தலா ரூ.350 வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 3 லட்சத்து 48 ஆயிரத்து 100 வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.