இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி மைய அரசு வழங்கியுள்ள புதிய ஊதிய விகிதம், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணி முடித்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களையும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு இவ்வனைவருக்கும் இடைக்கால நிலுவைத் தொகையை உடனடியாக அளித்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன் படி 1.1.2009 இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளோர்க்கு மூன்று மாத ஊதியம் (அடிப்படை ஊதியம் + அக விலை ஊதியம் + அகவிலைப்படி + தனி ஊதியம் இருப்பின்) 1.1.2009 அன்று இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாகப் பணி புரிந்துள்ளோருக்கு ஒரு மாத ஊதியமும், 1.1.2009 அன்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு மூன்று மாத ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் (ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், அகவிலை ஓய்வூதியம், அகவிலைப்படி) இடைக்கால நிலுவைத் தொகையாக ரொக்கமாக அளிக்கப்படும்.
பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில் நுட்பக் குழு ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறுவோருக்கும், சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிவோருக்கும் இது பொருந்தும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் நிலையான ஊதியம் பெறுவோருக்கும் இதே பணிக்கால அடிப்படையில் இடைக்கால நிலுவைத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் தொகை, அரசால் நிர்ணயிக்கப்படும் திருத்திய ஊதிய விகிதம், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தின் படி கணக்கிடப்படும் நிலுவைத் தொகையில் சரிக்கட்டப்படும், மேற்கூறியவாறு இடைக்கால நிலுவைத் தொகை வழங்கப்படுவதால் அரசுக்கு, ரூ.4,247 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.