பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்: வைகோ நம்பிக்கை
செவ்வாய், 13 ஜனவரி 2009 (10:11 IST)
திருமங்கலம் இடைத்தேர்தல் களத்தை தற்போது இழந்தாலும், மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்க போகும் தீர்ப்பு அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை சூட்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை வீழ்த்தி பணநாயகம் வெற்றி பெற்று உள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், எந்த இடைத்தேர்தலிலும் செலவழிக்கப்படாத பணத்தை ஆளும் தி.மு.க. திருமங்கலம் தொகுதியில் கங்கை வெள்ளமாக பாய விட்டது.
7ஆம் தேதி மாலை அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் தொகுதிக்கு உள்ளேயே முகாமிட்டு இருந்தனர். வாக்குபதிவு அன்று, இவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம், எங்களுக்கு ஓட்டுப்போடாவிட்டால், கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற விதத்தில் அச்சுறுத்தப்பட்டு, இதுவரை வாக்குசாவடிகளுக்கே செல்லாத வாக்காளர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் இதுவரையிலும் எந்த பொதுத்தேர்தலிலோ அல்லது இடைத்தேர்தலிலோ 90 விழுக்காடு வாக்குகள் பதிவு ஆனதே கிடையாது. பணநாயகமும், அதிகார மிரட்டலும் தான் திருமங்கலத்தில் அத்தகைய மாயதோற்றத்தை உருவாக்கியது. தி.மு.க.வினரால் தாக்கப்பட்டு அ.தி.மு.க.வினர் பலர் படுகாயமுற்றும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் கூட, தாக்கிய குண்டர்கள் ஒருவரைக்கூட காவல்துறை கடைசிவரையிலும் கைது செய்யவே இல்லை. ஆனால் காவல்துறையினரால் தாக்கப்பட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் கூட விடுவிக்கப்படவில்லை.
வாக்கு எண்ணுவதற்கு முதல்நாளே, 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டதாகவே அறிவித்து, வாழ்த்து சுவரெட்டிகள் மதுரையில் ஒட்டப்பட்டு இருக்கிறது. ஆளுங்கட்சியினர் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் ஊழல் பணத்துக்கு இடங்கொடுக்காமல், அ.தி.மு.க.விற்கு வாக்களித்த மக்களுக்கும், எதற்கும் அஞ்சாது கடமை ஆற்றிய அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் செயல்வீரர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமங்கலம் இடைத்தேர்தல் களத்தை தற்போது இழந்தாலும், மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்க போகும் தீர்ப்பு அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை சூட்டும் என்று வைகோ கூறியுள்ளார்.