முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசின் கடந்த 2 ஆண்டுகால சிறப்பான செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த மகத்தான அங்கீகாரம் திருமங்கலம் வெற்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியாகாந்தி வழி காட்டுதலில், பிரதமர் மன் மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் கடந்த 4 ஆண்டு கால மாபெரும் மக்கள் நலத்திட்டங்களுக்கும், முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசின் கடந்த 2 ஆண்டுகால சிறப்பான செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த மகத்தான அங்கீகாரம் திருமங்கலம் வெற்றி.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இதுவரை மத்திய அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அளித்துள்ளதும், சென்னைக்கு கடல் நீரை குடிநீராக்க ஆயிரம் கோடி, சுனாமி நிவாரண நிதி 6 ஆயிரம் கோடி, சேலம் உருக்காலை விரிவாக்கத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு அளித்து பிரதமர் மன்மோகன்சிங்கால் தொடங்கி வைக்கப்பட்ட சாதனை.
சேது சமுத்திரத் திட்டம், தமிழகம் உட்பட நாடெங்கும் 71 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் கடன் ரத்து, மேலும் மிகக்குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு சுலபக் கடன், வங்கிகளில் மாணவர்களுக்கு மிக எளிதான கல்விக்கடன், வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், வயதான அத்தனை பேருக்கும் வாரிசுகள் இருந்தாலும் ஓய்வூதியம், முறைசாரா தொழிலாளர்களுக்கு காப்பீடு.
ஓய்வூதியம், தமிழ் செம்மொழியானது போன்ற மத்திய அரசின் சாதனைகளுக்கும், தமிழக அரசின் சாதனைகளுக்கும் மக்கள் தந்த அங்கீகாரம் தான் திருமங்கலம் வெற்றி. தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கும் மக்களின் தீர்ப்பு இது தான் என்பதை கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ள இந்த வெற்றிக்கு வழி வகுத்த மக்களுக்கும், அதற்காக உழைத்த காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தங்கபாலு கூறியுள்ளார்.