இந்த ஜனநாயக சீர்கேடுகளுக்கு காரணமாய் இருந்தவர்களை மக்கள் அடையாளம் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று தெரிவித்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பண பலத்தாலும், அராஜகத்தாலும், அச்சுறுத்தலாலும் ஏற்பட்ட இந்த முடிவுகளை ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பாகவும், ஜனநாயகத்தின் உண்மையான தீர்ப்பாகவும் எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் முடிவுகள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரை ஒரு முடிவல்ல, எதிர்காலத்தில் ஒரு எழுச்சியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பம். மாற்றத்தை நோக்கி செல்கின்ற பயணம் கடினமானதாகத் தான் இருக்கும்; எந்த ஒரு வெற்றியும் எளிதாக கிடைப்பதில்லை. முயற்சி வேண்டும் உறுதியான முயற்சி வேண்டும் நியாயமும், தர்மமும் கலந்து முயற்சி வேண்டும்.
உணர்வோடு பணிபுரிந்த கட்சியின் தோழர்கள், தேர்தலின் முடிவு முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று அறிந்தும், தலைவன் கட்டளையிட்டு விட்டானே என்று, அந்தக் கட்டளையை ஏற்று சிறப்பாக பணிபுரிந்த நம் இயக்கத்தின் சகோதர, சகோதரிகளுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு எங்களை ஆதரித்த அனைவருக்கும், திருமங்கலம் வாக்காள பெரு மக்களுக்கும் எங்கள் நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறோம். எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறுவது மட்டும் இலக்கல்ல. கடும் முயற்சி முக்கியம், சிறப்பாக செயல்பட்டோம் என்ற உறுதியுடன், வரும் காலங்களில் நாம் மேலும் மக்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்ற அன்பு வார்த்தைகளுடன், ஆறுதல் வார்த்தைகளுடன் நம் கடமையை ஆற்றுவோம்.
இந்த ஜனநாயக சீர்கேடுகளுக்கு காரணமாய் இருந்தவர்களை மக்கள் அடையாளம் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை. பண பலத்தாலும், அராஜகத்தாலும், அச்சுறுத்தலாலும் ஏற்பட்ட இந்த முடிவுகளை ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பாகவும், ஜனநாயகத்தின் உண்மையான தீர்ப்பாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஜனநாயக மரபுகளை கட்டிக்காக்க வேண்டிய பெரும் பொறுப்போடு சமத்துவ மக்கள் கட்சி செயல்படும். அரசியல் உலகில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியில் சற்றும் துவண்டுவிடாமல் எங்கள் இயக்கத்தின் தொண்டர்கள், மேலும் உறுதியோடு செயல்படுவார்கள்.
தமிழக மக்களும் எதிர்காலத்தில் உண்மையான ஜனநாயக மரபுகளை மதித்து ஒரு நல்ல மாற்றத்தை தரும் வகையில் ஒரு மௌனபுரட்சி ஏற்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அயராது பாடுபடும் என்ற உறுதியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சரத்குமார் கூறியுள்ளார்.