விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவேண்டிய அவசர அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.
இலங்கையில் நடக்கும் போரில், அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வேதனை தெரிவித்த ராமதாஸ், உடனடியாக, அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இடைத்தேர்தல்களே தேவையில்லை என்று பா.ம.க சொல்லி வருகிறது. ஆஸ்ட்ரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருப்பது போல், கட்டாய வாக்குமுறையை கொண்டுவர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.
லாரி உரிமையாளர்களின் பிடிவாதத்தால், வேலை நிறுத்தம் இன்னும் தொடரலாம் என்ற நிலைமை இருக்கிறது. இதனால், அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்த ராமதாஸ், எனவே, மத்திய அரசு கவுரவம் பார்க்காமல் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இதற்கு அவர்கள் இணங்காவிட்டால், அனைத்து லாரிகளையும் அரசே கைப்பற்றி இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சரக்கு போக்குவரத்துக்கழகம் என்ற ஒரு நிறுவனத்தை முன்பு அரசு நடத்தி வந்திருக்கிறது. அதனை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் ராமதாஸ் கூறினார்.